Skip to main content

இரட்டை ஆணவக்கொலை வழக்கு; குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு

Published on 29/01/2025 | Edited on 29/01/2025
Coimbatore double homicide case; verdict

கடந்த 2019 ஆம் ஆண்டு கோவையை சேர்ந்த காதல் திருமணம் செய்து கொண்ட இருவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையை நிகழ்த்திய வினோத் என்பவர் குற்றவாளி என கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில் தண்டனை விவரத்தை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதலை கனகராஜின் வீட்டார் ஏற்றுக் கொள்ளாத நிலையில் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

இந்நிலையில் கனகராஜின் மூத்த சகோதரர் வினோத் கனகராஜின் வீட்டுக்குச் சென்று தாக்கியதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தடுக்க வந்த வர்ஷினி பிரியாவும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலையை நிகழ்த்திய வினோத் ராஜ் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு உடந்தையாக இருந்த சின்னராஜ், கந்தவேல், ஐயப்பன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.

சுமார் நான்கரை ஆண்டுகளாக இந்த வழக்கு கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று தீர்ப்பு இந்த வழக்கில் வழங்கப்பட்டது. சிறப்பு அரசு வழக்கறிஞராக பவானி மோகன் ஆஜரானார். விசாரணை முடிவில் மரண தண்டனை கொடுக்கும் அளவிற்கு குற்றம் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, வினோத் ராஜை குற்றவாளி என அறிவித்தார். வழக்கின் தண்டனை விவரத்தை வருகின்ற 29ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட வினோத் குமாருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

சார்ந்த செய்திகள்