Skip to main content

மாணவி தற்கொலை- பள்ளியின் முதல்வர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

Published on 13/11/2021 | Edited on 13/11/2021

 

coimbatore district school student incident police investigation

 

கோவையில் 17 வயது பள்ளி மாணவி ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பயின்று வந்த 17 வயது மாணவிக்கு அப்பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பள்ளியின் முதல்வரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த மாணவி நேற்று முன்தினம் (11/11/2021) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இந்த நிலையில், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் மாணவியின் இல்லத்தின் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் தற்கொலைக்கு காரணமாக அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 

இதற்கிடையில், தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக, அப்பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை கைது செய்த காவல்துறை, அவரை சிறையில் அடைத்தது. மேலும், மாணவி தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

அதேபோல், மாணவியின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற கோவை மாவட்ட காவல்துறை துணை ஆணையர் ஜெயச்சந்திரன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "மாணவி மீதான பாலியல் வழக்கு தொடர்பாக கோவை தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சட்ட ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்