Advertisment

coimbatore district police arrested two persons court order

Advertisment

கோவை மாவட்டம், வெள்ளானைப்பட்டியைச் சேர்ந்தவர் மாசாக் கவுண்டர் (வயது 81). இவருக்கு 4 சென்டில் சொந்த வீடு உள்ளது. இவரிடம் ஆரோக்கிய சார்லஸ் (வயது 44), சுதா (வயது 43) ஆகியோர் வீட்டின் பத்திரத்தை வைத்து பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சம் மானியம் வாங்கலாம் என்று கூறி உள்ளனர்.மேலும், இதற்கு ஆரோக்கிய சார்லஸ் பெயரில் பவர் ஆவணம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதை நம்பிய மாசாக் கவுண்டர், ஆரோக்கிய சார்லஸ் பெயருக்கு பவர் எழுதிக் கொடுத்து உள்ளார். அவர், அதைப் பயன்படுத்தி வீட்டை சுதாவின் பெயருக்கு மாற்றிக் கொடுத்து உள்ளார். அப்போது மாசாக் கவுண்டருக்கு காசோலைகள் மூலம் பணம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வீட்டை அபகரித்து தங்கள் பெயருக்கு மாற்றியது மாசாக் கவுண்டருக்கு தெரிய வர, அவர் உடனே இந்த மோசடி பற்றி உறவினர்களின் உதவியுடன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

இது குறித்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் காவல்துறை துணை சூப்பிரண்டு சேகர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுதா மற்றும் ஆரோக்கிய சார்லஸ் ஆகியோரைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று (18/06/2021) சுதா, ஆரோக்கிய சார்லஸ் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் செந்தில், கணேசமூர்த்தி, ரமணிநாதன், மற்றொரு செந்தில் ஆகிய நான்கு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

முன்னதாக, கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.