/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/saameeran-ias-art.jpg)
கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. கணவரை இழந்த ஷீலாவுக்கு 14 வயதில் ராமசாமி எனும் மாற்றுத்திறனாளி மகன் இருக்கிறார். தங்குவதற்கு சரியான இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த ஷீலாவுக்கு மணியம்மாள் என்ற மூதாட்டி தனது வீட்டில் தங்க வைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இருப்பினும், மாற்றுத்திறனாளி மகனை விட்டு எங்கும் செல்ல முடியாத காரணத்தால் ஷீலாவால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. இதனால் அன்றாடம் உணவுக்கே அல்லல்படும் சூழல் ஏற்பட்டது.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையே அவர்களின் ஒரே வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு கொடுத்து உதவி வரும் மூதாட்டி மணியம்மாள் கடந்த திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு அவர்களை அழைத்துச் சென்று வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தார். இந்த மனுவை உடனடியாக ஆய்வு செய்த ஆட்சியர், அடுத்த 24 மணி நேரத்தில்நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு வீடு வழங்க உத்தரவிட்டார். அதன்படி நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி திட்டப்பகுதி குடியிருப்பில் வீடு ஒன்றுஷீலா குடும்பத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கோவை ஆட்சியர் சமீரன் ஷீலா வீட்டிற்கு நேரில் சென்றுவீடு ஒதுக்கீட்டிற்கான உத்தரவை வழங்கினார்.
மனு கொடுத்த 24 மணி நேரத்தில் வீடு வழங்க உத்தரவிட்டதுடன் நேரிலேயே சென்று உத்தரவு நகலை வழங்கிய ஆட்சியரைப் பார்த்ததும்,தாய் ஷீலா கண்ணீர் விட்டு அழுது கொண்டே ஆட்சியரின் காலில் விழ முயன்றார். அதனைஆட்சியர் தடுத்தார்.இந்தச் சம்பவம் காண்போர் நெஞ்சை நெகிழச் செய்வதாய் இருந்தது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)