கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். தற்பொழுது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது யுஏபிஏ (உபா) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
அதேபோல் இன்று மாலை கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவர் என கோவை காவல் ஆணையர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் முகமது ரியாஸ், முகமது தல்கா, முகமது நவாப் இஸ்மாயில்,முகமது அசாருதீன், ஃபிரோஸ் இஸ்மாயில் 5 பேருக்கும் நவம்பர் எட்டாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து பேருமே 28 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றும், இதற்கு முன்பே என்ஐஏ விசாரணை வளையத்தில் இருந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக முபீனுக்கு கார் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட முகமது தல்கா ஏற்கனவே 1998 ஆம் ஆண்டு நிகழ்ந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நவாப் கான் என்பவரின் மகன் என்பது தெரிய வந்துள்ளது. நவாப் கான் தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் தம்பி என போலீசார் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.