
பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனின் 3 நாள் போலீஸ் காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜாரானர். ஜூன் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.
சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் ‘பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தடகள பயிற்சி மையத்தை சென்னை, பாரிமுனை, பிராட்வேயில் பச்சையப்பன் பள்ளி வளாகத்தில் வைத்து நடத்தி வந்தார். தற்போது மத்திய அரசின் ஜிஎஸ்டி பிரிவில் கண்காணிப்பாளராக பணியாற்றும் இவரிடம் , தடகள வீராங்கனைகள் சிலர் பயிற்சி பெற்று வந்தனர்.
இதில் , நாகராஜன் மீது சென்னை பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வீராங்கனை ஒருவர் அளித்த புகாரில், பல சமயங்களில் பிசியோதெரபி பயிற்சி வழங்குவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிவித்திருந்தார். இந்த புகாரில் நாகராஜன் மீது போக்சோ சட்டப்பிரிவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, மே 28 ஆம் தேதி நாகராஜனை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கபட்டார்.
நாகராஜனை 5 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அனுமதி கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி முகமது பாரூக், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து 3 நாள் காவல்துறை காவல் முடிந்து நாகராஜனை காவல்துறையினர் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து வரும் 11 தேதிவரை நாகராஜனை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.