/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high court_10.jpg)
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கு, தடை விதிக்கக்கோரிய இடைக்கால மனு மீதான உத்தரவை,சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 20-ம் தேதி அறிவிக்கவுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக, மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், அதற்கு தடை விதிக்கக்கோரியும், தமிழகத்தில் உள்ளநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் பழமையான இரு கூட்டுறவு வங்கிகள் சார்பில்,சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல் முதலாக 1904-ம் ஆண்டு துவங்கப்பட்ட பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி சார்பிலும், வேலூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரைமாநில அரசு சம்பந்தப்பட்டது என்பதால், அரசியல் சாசனத்தின்படி நாடாளுமன்றத்திற்கு இதுசம்பந்தமாக சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கூட்டுறவு சங்கங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இந்த அவசர சட்டம் உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு முரணாக மட்டுமல்லாமல், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக உள்ளது என வாதிட்டார்.
ரிசர்வ் வங்கி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நாடு முழுவதும் 1,937 கூட்டுறவு சங்கங்கள், 7.27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு கடன் வழங்கி, வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு,வங்கியை ஒழுங்குபடுத்த,ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர,மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதாக வாதிட்டார். இந்த வாதத்தையே மத்திய அரசு தலைமை வழக்கறிஞரும் முன்வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொதுமக்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை என நம்பினால், பிறகு ஏன் கூட்டுறவு சங்கங்களுக்கு வங்கி நடவடிக்கைகளுக்கான உரிமங்களை ரிசர்வ் வங்கி வழங்கியது எனக் கேள்வி எழுப்பி, அவசர சட்டத்திற்கு தடை கோரிய இடைக்கால மனு மீதான உத்தரவை 20-ம் தேதி பிறப்பிப்பதாகக்கூறி, வழக்கை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)