Skip to main content

கூட்டுறவு சங்க நில விவகாரம்; தலைவர் மற்றும் துணைத் தலைவர் சஸ்பெண்ட் ரத்து - உயர் நீதிமன்றம் உத்தரவு..!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

Co-operative Land Lease Issue; High Court orders suspension of chairman and vice-chairman

 

கூட்டுறவு சங்க நிலத்தைக் குத்தகைக்கு வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத்தலைவரை சஸ்பெண்ட் செய்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

பெரம்பூர் கூட்டுறவு கட்டிடச் சங்கத்துக்கு சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தைத் தனிநபர் ஒருவருக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு குத்தகைக்கு வழங்கியதாகவும், இதன் மூலம் கூட்டுறவு சங்கத்துக்கு பெருத்த இழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறி, அச்சங்கத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவரை ஆறு மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.

 

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கூட்டுறவு சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துணைத் தலைவர் ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். 

 

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அரசியல் காரணங்களுக்காக அவசர அவசரமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உரிய சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார். நில ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்ததற்கு ஆரம்பக்கட்ட முகாந்திரங்கள் கண்டறியப்பட்டதால் உரிய சட்ட விதிகளைப் பின்பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் ஆஜரான செல்வேந்திரன் வாதிட்டார்.

 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்ய முடியாது எனவும், அவர்களை சஸ்பெண்ட் செய்வது பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறி, இதுசம்பந்தமாக சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

அதேசமயம், அவர்கள் முறைகேடுகளில் புகார் தொடர்பாக மனுதாரர்களுக்கு எதிரான விசாரணையை எட்டு வாரங்களில் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்