Skip to main content

கேள்வி கேட்டால் வேலையில்லை!! தொழிலாளர்கள் சர்ச்சையில் சிக்கிய சிஎம்சி.

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

வேலூர் மாநகரில் இயங்கும் பிரபலமான சி.எம்.சி மருத்துவமனை, தனது வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் சிலவற்றை இடித்துவிட்டு புதியதாக கட்டிடங்கள் கட்டுகின்றன. இந்த கட்டிடங்கள் கட்டும் பணியில் தமிழகத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் ஈடுப்பட்டு வந்தனர்.

 

cmc protest

இந்நிலையில் நான்கு தினங்களுக்கு முன்பு நீங்கயெல்லாம் வேலைக்கு ஒழுங்கான நேரத்துக்கு வர்றதில்லை. வயித்துக்கு என்ன திங்கறிங்க என அந்த கட்டிட கட்டும் பணியின் மேற்பார்வையாளர் திட்டியுள்ளார். அதோடு, நீங்க இனிமே யாரும் வேலைக்கு வர தேவையில்லை. நாங்க வடமாநிலத்துக்காரங்களை வேலைக்கு வச்சிக்கறோம் என சொல்லியுள்ளார்கள். இதில் அதிர்ச்சியான தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 24ந்தேதி மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டும் இடத்தில் கூடி நின்றவர்களை வெளியே துரத்தியுள்ளனர்.

 

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிலாளர் பிரிவான ஏ.ஐ.டி.யூ.சி யின் மாவட்ட பொதுச்செயலாளரும், மாநில துணை தலைவருமான தேவதாஸ் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சி.எம்.சி நிர்வாகத்தை கண்டித்து செப்டம்பர் 28ந்தேதி காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேலை தரமுடியாது எனச்சொல்லி துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர்.

 

இதுப்பற்றி தொழிலாளர்கள் தரப்பில் பேசியவர்கள், காலை 9 மணிக்கு வேலைக்கு வந்தால் மாலை 6 மணிக்கெல்லாம் நம்மவூர் தொழிலாளர்கள் புறப்பட்டுவிடுவார்கள். சி.எம்.சி கட்டும் புதிய கட்டிடத்தில் வேலை செய்ய வரும் தொழிலாளர்களிடம் காலை 7 மணிக்கு வர வேண்டும், இரவு 7 மணி வரை வேலை செய்ய வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்கள். இதனை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துள்ளனர். அப்படி பணியாற்ற வேண்டுமானால் கூடுதல் கூலி வழங்க வேண்டும் எனக்கேட்டுள்ளனர். அப்படி தரமுடியாது எனச்சொன்ன ஒப்பந்ததாரர், நம்மவூர் ஆட்களை துரத்தியடித்துள்ளார்.

 

நம்ம மாநிலத்தில் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு தரும் கூலி என்பது குறைவானது. அப்படியிருக்க அதைவிட குறைவான கூலி ஆட்கள் கிடைப்பதால் நம்மாட்களை துரத்துகிறார்கள். நம்மாட்கள் கேள்வி கேட்பார்கள், அவர்கள் அடிமைபோல் இருப்பார்கள். நம்மவூர் ஆட்களை விட குறைவான கூலிக்கு கட்டிடம் கட்டும் இடத்திலேயே தங்கி வேலை செய்ய வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தயாராக இருப்பதால் அவர்களை கொண்டு வந்து வேலை வாங்கவே நம்மவூர் ஆட்களை துரத்துகிறார்கள்.

சார்ந்த செய்திகள்