
திண்டுக்கல்லில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, “நான் அமைச்சராக முதன் முதலில் பொறுப்பேற்று சத்துணவு மையங்களை பார்வையிடுவதற்காக கோவை சென்றிருந்தேன். நமது குழந்தைகள் அந்த சாப்பாட்டை பாதி சாப்பிட்டும், பாதி சாப்பிடாமலும் மீதமான சாப்பாட்டை அப்படியே கொண்டு வந்து குப்பையில் கொட்டுவதை பார்த்தேன். அது குறித்து அந்த மைய பொறுப்பாளரிடம் நான் கேட்டபோது சாம்பாரில் சோயா பவுடர் போடுவது குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் சாப்பாட்டை வீணாக்குகிறார்கள் என்று தெரிவித்தனர். அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் பருப்புக்கு பதிலாக சோயா பவுடர் தான் சாம்பாரில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தது.
கோவையிலிருந்து திண்டுக்கல் வந்து இங்குள்ள மையங்களையும் பார்வையிட்டபோதும் மாணவர்கள் சோயா பவுடர் சாம்பாரை சாப்பிட முடியாமல் சாப்பாட்டை கொட்டுவதை பார்த்தேன். உடனடியாக நான் அப்போதைய முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இந்த சோயா பவுடருக்கு பதில் பருப்பு சாம்பார் போடலாமே என்று கேட்டேன். ஆனால் பருப்பின் விலைக்கும், சோயா பவுடர் விலைக்கும் அதிக வித்தியாசம் இருந்தது. இருந்தாலும் தலைவர் கலைஞருக்கு கவனப்படுத்தியவுடன் உடனடியாக மாற்ற உத்தரவிட்டார். இப்படித்தான் சத்துணவு சாம்பாரில் பருப்பு வந்த கதை.
இது மட்டுமல்ல சத்துணவில் முட்டை கொண்டு வந்ததும் அப்படித்தான். சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் உக்கம்சந்த் பேசும் போது சொன்னார், மதிய உணவுத் திட்டத்தை எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டமாக கொண்டு வந்தார். நீங்கள் இந்த திட்டத்தை சத்துணவு திட்டம் இல்லை என்று சொல்கிறீர்களே, நீங்கள் முட்டை போடுவீர்களா? என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த கலைஞர் இனிமேல் சத்துணவில் முட்டை வழங்கப்படும் என்று அறிவித்தார். ஒரு நாள் முட்டை என்பதை, 2 நாட்கள் ஆக்கினோம், 3 நாட்கள் ஆக்கினோம். பிறகு வாரம் முழுவதும் என்று மாற்றினோம்.
ஒவ்வொரு மாறுதலுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆட்சி மாறும் போது ஒரு திட்டத்தில் வளர்ச்சி என்பது முக்கியம். அதிலே பணியாற்றக்கூடிய சமையலராக இருந்தாலும், உதவியாளராக இருந்தாலும், அமைப்பாளராக இருந்தாலும். அவர்களது அடிப்படை வாழ்கையில் அவர்களுக்கென்று கோரிக்கைகள் உண்டு. எங்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்துப் போராடி வருகிறீர்கள். அரசின் நிதி நிலைமைகளுக்கு ஏற்ப பல்வேறு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இருக்கிறது என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன். ஏனென்றால் இது உங்கள் அரசு. நீங்கள் உருவாக்கிய அரசு. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை.

நமது முதலமைச்சர் கலைஞரைப் போல உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை உடையவர். இப்போது கூட அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை செய்தார். அதன் தொடர்ச்சியாக செப்டம்பரிலும் ஒரு அறிவிப்பு வெளியிட உள்ளார். ஆக அதைத்தான் உங்களிடம் ஆரம்பக் கட்டத்தில் சொன்னேன். செய்ய வேண்டிய மனது பெரிதாக இருக்கிறது. அதற்கு என்ன வழி என்று தான் உருவாக்கிட வேண்டும். இங்கே மாநாட்டில் நீங்கள் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்த புத்தகத்தை கொடுத்தார்கள். இதை நான் படித்து உங்கள் அமைச்சரிடம் இது குறித்துக் கேட்கிறேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் வெளிப்படைத்தன்மையுடன் இந்த அரசு இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசைப் பொறுத்த வரை ஒரு டிரான்ஸ்பரன்ட் கவர்மெண்டாகத்தான் இருக்க வேண்டும். அரசு ஊழியர்கள் என்றால் அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் மட்டுமல்ல, நமது திட்டங்களை நிறைவேற்றுகிற அமைப்பாளர்களும் தான். உங்கள் கோரிக்கைகளில் எதை எதை நிறைவேற்ற வேண்டுமோ, அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கு உங்களில் ஒருவனாக நானும் இருப்பேன் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு அரசு ஊழியர் அரசிடம் வைக்கிற கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றாலும், அவர்களது அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. உங்களுக்கு சம்பள பிரச்சனைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறது. இந்த திட்டம் சிறப்பாக நடைபெற வேண்டும். இப்போது காலை உணவுத் திட்டம் என்று கொண்டு வந்துள்ளோம். இந்த திட்டம் சிறப்புற நடைபெற வேண்டும். உங்கள் கோரிக்கை கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
உங்கள் கோரிக்கைகள் நிறைவேற நாங்கள் உங்களுடன் துணையாக இருப்போம். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, அதனால் வரவில்லை என்று சொல்லியிருந்தேன். இப்போது நல்ல ஆரோக்கியத்தோடு வந்திருக்கிறேன். சத்துணவு ஊழியர் சங்க மாநாட்டிற்கு வந்த பிறகு எனக்கு சத்து கிடைத்தது போல் உள்ளது. உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உங்கள் அமைச்சரிடமும், நமது முதல்வரிடமும் எடுத்துக் கூறுவேன்” என்று கூறினார்.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கலா தலைமை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் சுகந்தி வரவேற்றார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் சச்சிதானந்தம், பொதுச் செயலாளர் மலர் விழி, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், ஆகியோ ர் கலந்து கொண்டனர்