
“தைரியமாக இருங்க. நல்லபடியா ஆபரேஷன் நடக்கும்” என முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் செல்போனில் நலம் விசாரித்த முதலமைச்சரின் செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சௌபாக்யா. இந்த தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு, அவரது மூன்றரை வயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியது. இதனை சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்ற நிலையில், அதன் பாதிப்பு குறைந்தபாடில்லை. இதனால் அச்சமடைந்த அவரது பெற்றோர், டானியாவை தூக்கிக்கொண்டு, கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கியுள்ளனர்.
ஒருகட்டத்தில், அந்த சிறுமியின் ஒருபக்க முகம் முழுவதுமாக சிதைவு நோயால் பாதிப்படையத் தொடங்கியது. இதனால், அதிர்ச்சியடைந்த டானியாவின் பெற்றோர், சமூக வலைதளம் வாயிலாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதவி கோரியிருந்தார்கள். அதன்பிறகு, முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின் பேரில், சிறுமி டானியாவுக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிறுமி டானியாவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார். இந்நிலையில், சிறுமி டானியா அறுவை சிகிச்சையின் போது வாய் பகுதியில் பொருத்தப்பட்ட சிறிய கிளிப்பை மீண்டும் எடுக்க வேண்டும் என்பதற்காக தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையறிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மருத்துவமனைக்குச் சென்று சிறுமியிடம் நலம் விசாரித்தார். அப்போது அமைச்சருக்கு போன் செய்த முதலமைச்சர் ஸ்டாலின் சிறுமியிடம் நலம் விசாரித்தார். அப்போது, சிறுமியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது “நல்லபடியாக சிகிச்சை முடியும். நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள்” என ஆறுதல் தெரிவித்தார்.