
இசைஞானி இளையராஜா கடந்த ஆண்டு, 35 நாட்களில் எதுவும் கலக்காத ஒரு முழு சிம்பொனியை முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து ‘வேலியன்ட்’ எனும் தலைப்பில் அவர் உருவாக்கியுள்ள முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் கடந்த 8ஆம் தேதி (08.03.2025) நடைபெற்றது. அதன் பின்னர் லண்டனில் இருந்து இளையராஜா தமிழகம் திரும்பினார். தமிழகம் திரும்பிய இசையமைப்பாளர் இளையராஜாவை அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக சார்பில் கரு.நாகராஜன் , விசிக சார்பில் வன்னியரசு, இசையமைப்பாளர் தீனா, திரைப்பட இயக்குநர் பேரரசு ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை இன்று (13.03.2025) அவரது முகாம் அலுவலகத்தில், இளையராஜா சந்திதார். அப்போது லண்டன் நகரில் முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி மாபெரும் சாதனை படைத்ததற்காக இளையராஜாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டினார். இந்த சந்திப்பின் போது, இசைஞானி இளையராஜா, தமிழ்நாடு அரசின் சார்பில் தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின்போது, நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனிருந்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “லண்டன் மாநகரில் சிம்போனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற இருந்ததை யொட்டி சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2ஆம் தேதி (02.03.2025) நேரில் சென்று அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.