நாடு முழுவதும்புதிய வருடத்தை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். இன்று நள்ளிரவு தொடங்கவுள்ள ஆங்கிலப் புத்தாண்டுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துக்களைத்தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துதெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் காணொலி வெளியிட்டுள்ள அவர்,“எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்பதல்ல வாழ்க்கை. ஆண்டொன்று போனால் வளர்ச்சியொன்று கூடும் என்று வாழ்வது தான் வாழ்க்கை. அந்த வகையில், இந்த ஆண்டு என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் அனைத்துத்துறைகளிலும் வளர்ச்சியும்எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே இருந்திருக்கிறது.
உங்கள் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்ப்பது தான் எனக்கு முக்கியம். அதற்காகத்தான் முதல்வர் பதவியைப் பெரும் பொறுப்பாகப் பார்த்துப் பணியாற்றி வருகிறேன். கடந்த ஓராண்டுக்காலமாக நம் அரசு தமிழக மக்களுக்கு ஏராளமான மகத்தான சாதனைகளைச்செய்திருக்கிறது. உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகதமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023 இல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக!இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!” என்றார்.