/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1000_157.jpg)
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முதல்வர்ஸ்டாலின் சென்னை நங்கநல்லூர் அரசுப் பள்ளியில் உள்ள காமராஜர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 ஆவது பிறந்தநாளான இன்று, நங்கநல்லூர் நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கல்வி வளர்ச்சி நாள் விழாவில் பங்கேற்று, அவரது புகழைப் போற்றினேன். அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக 2017-இல் பொறுப்பேற்றது முதல், என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளையும் பொன்னாடைகளையும் தவிர்த்து, புத்தகங்களை அளித்திடச் சொல்லியிருந்தேன். அதன்படி என்னை வந்தடைந்த புத்தகங்களில் ஒன்றரை இலட்சம் புத்தகங்களைத்தமிழ்நாட்டின் பல்வேறு நூலகங்களுக்கும், என்னிடம் புத்தகங்கள் வேண்டி கடிதம் எழுதியவர்களுக்கும் அளித்துள்ளேன்.
அதன் தொடர்ச்சியாக, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில், முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த கல்வி வளர்ச்சி நாளில், 7740 புத்தகங்களைப் பொது நூலகத்துறைக்கு வழங்கினேன். பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் - கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு நாள் என இந்நாளில், 'வீட்டிற்கோர் புத்தகச்சாலை' என்று பேரறிஞர் அண்ணா சொன்னது மெய்ப்பட உழைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)