“திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்படுவதால் நிதியை வீணாக்கக் கூடாது” - முதல்வர் அறிவுரை

cm stalin advice government offciers

பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று வேலூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுபல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அத்துடன் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை வேலூர் அலமேலுமங்காபுரத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதல்வர் அங்குள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியாக உள்ளதா என அவரே உண்டு ஆய்வு செய்தார். அதே சமயம் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உணவு பரிமாறினார்.

இந்த நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அனைத்து துறை அதிகாரிகளும் மக்கள் நலத்திட்டங்கள் செயலாக்கத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சாலை மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட முக்கியத்துறைகளின் செயல்பாடு பற்றி ஆலோசிக்கப்பட்டது. அரசின் பல திட்டங்கள் கடன் வாங்கி நிறைவேற்றப்படுகிறது;அதனால் நிதியை வீணாக்கக் கூடாது. திட்டங்களின் நோக்கம் சிதையாமல் முழுமையாக நிறைவேற்றும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

2022 ஆம் ஆண்டிற்கான சில பணிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.இது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல. அடுத்த மாதம் தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கலாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து அமைச்சர்களுடைய துறை மானிய கோரிக்கை தாக்கலாக இருக்கிறது. அதனால் இன்னும் கூடுதல் பணிகள் வரவுள்ளதால், தற்போதுள்ள பணிகளை விரைந்துமுடிக்க வேண்டும். அரசின் முன்னுரிமை திட்டங்களை கூடுதல் கவனத்துடன் அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் என் கள ஆய்வுத் திட்டத்திற்கான நோக்கம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Vellore
இதையும் படியுங்கள்
Subscribe