Skip to main content

அரசு ஊழியர்களுடன் முதலமைச்சர் பேச்சு நடத்த வேண்டும்! ராமதாஸ்

Published on 03/12/2018 | Edited on 03/12/2018
ramadoss



கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும். அதற்கு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும். எனவே அரசு ஊழியர்களுடன் முதலமைச்சர் பேச்சு நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4&ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்துள்ளன. வேலைநிறுத்தம் தொடங்க இன்னும் இரு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
 

21 ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை ஜாக்டோ-ஜியோ அமைப்பு நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு அரசு மதிப்பளிக்காததால் தான் வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
 

கஜா புயல் தாக்கியதால் சின்னாபின்னமாகியுள்ள காவிரி பாசன மாவட்டங்களை சீரமைக்கும் பணியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், அப்பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நிலைமை என்னவாகும்? என்பதை நினைத்துப் பார்க்கவே கவலையாக உள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருந்தாலும் பொது நலன் கருதி போராட்டத்தை ஒத்திவைப்பது தான் சரியானதாக இருக்கும். கள நிலைமையை அரசு ஊழியர்களுக்கு விளக்கியும், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்தும் இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டியது அரசின் கடமையாகும்.
 

ஆனால், இந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது. ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன் தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு நேற்று நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்தன. இதைத் தொடர்ந்து திட்டமிட்டவாறு 4-ஆம் தேதி வேலைநிறுத்தம் தொடங்கும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று விடுத்த வேண்டுகோளையும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு நிராகரித்து விட்டது. இதனால் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் 4-ஆம் தேதி தொடங்குவது உறுதி ஆகி விட்டது. இன்றைய சூழலில் அரசு ஊழியர் வேலைநிறுத்தம் அனைவரையும் கடுமையாக பாதிக்கும்.
 

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் மிகவும் முக்கியமானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது தான். அந்தக் கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட வேண்டியதும் கூட.  புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை. பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை 15 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. 2011-ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி  அளித்த ஜெயலலிதா, ஐந்தாண்டு ஆட்சியில் அதை செய்யாமல் 2016-ஆம் ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாகத் தான் இதுபற்றி பரிந்துரைக்க சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்தார். 
 

அக்குழு கலைக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் பின் ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டது. 33 மாத இழுபறிக்கு பிறகு ஸ்ரீதர் குழு கடந்த 27-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வல்லுனர் குழு அறிக்கை கிடைத்த பின் அதை அரசு உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யாதது தமிழக அரசின் படுதோல்வி.
 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் வரை அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட வேண்டும். அதற்கு அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும். எனவே,  பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வல்லுனர் குழு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். ஓய்வூதியம் என்பது பணியாளர்களின் உரிமை என்பதால், ஸ்ரீதர் குழுவின் பரிந்துரை என்னவாக இருந்தாலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை முதலமைச்சர் பழனிச்சாமி நேரடியாக அழைத்து பேச வேண்டும். ஒரு குறிப்பிட்ட தேதி நிர்ணயித்து, அதற்குள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து, அவர்களின் போராட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.