/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mdu-girl-art.jpg)
மதுரை மாவட்டம் திருவேங்கடம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோபனா. இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக உயர்கல்வி பயில இயலாத நிலை குறித்துக் கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவியை மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பயில ஏற்பாடு செய்தார். அதோடு மாணவிக்கு புத்தகங்கள் மற்றும் நிதியுதவியும் வழங்கி உதவி செய்தார்.
இத்தகைய சூழலில் தான் மாணவி பட்டப்படிப்பு முடித்து தற்போது மதுரை தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) கணினி உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாணவி ஷோபனா, தனது குடும்பத்தினருடன் மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (10.11.2024) சந்தித்தார். அப்போது கல்வி பயில ஏற்பாடு செய்ததற்கு, புத்தகங்கள், நிதியுதவி வழங்கி உதவி செய்ததற்கும் மற்றும் வேலைவாய்ப்பு பெற்றிட உதவியதற்காகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “படிக்க உதவிட வேண்டும் என 2021ஆம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன். மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன். ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)