CM says struggle will continue until we recover the state's right to education 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (21.01.2025) கலந்து கொண்டார். அப்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரத்தின் சொந்த நிதியிலிருந்து 12 கோடி ரூபாய் செலவில் அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள லக்ஷ்மி வளர்தமிழ் நூலகத்தையும், திருவள்ளுவர் உருவச் சிலையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் உயர்கல்வித் தரமும், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான், இன்று இந்தியாவிலேயே அதிக அளவிலான அரசுப் பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலமாக திகழ்கிறது.

Advertisment

ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக உள்ளது., அதிக அளவிலான மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக விளங்குகிறது. புகழ்பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக்கொண்டிருக்கிறது. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகமாக 49 விழுக்காடு பெற்று இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது. இப்படி உயர்கல்வியில் உன்னதமான இடத்தை தமிழ்நாடு பெற்று வருகிறது.

Advertisment

அதனால்தான் பல்கலைக்கழகங்களின் நிர்வாகம், மாநில அரசின் முழு கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் வேந்தர் பதவியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இருக்கவேண்டும் என்று சொல்கிறோம். பள்ளி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் பார்த்துப் பார்த்துத் திட்டங்களை உருவாக்கிச் செலவு செய்வது மாநில அரசு. பேராசியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது மாநில அரசு. பல்கலைக்கழககங்ளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருவது மாநில அரசு. ஆனால், வேந்தர் பதவி மட்டும், மத்திய அரசால் நியமிக்கப்பட்டவருக்கா?.

அதுதான் நம்முடைய கேள்வி. அதனால்தான் சட்டப்போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறோம். மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்கும் வரைக்கும் இந்தச் சட்டப்போராட்டங்களும் அரசியல் போராட்டங்களும் தொடரும்” எனப் பேசினார். இவ்விழாவில், மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, எஸ். ரகுபதி, கே.ஆர். பெரியகருப்பன், மு.பெ. சாமிநாதன், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், கோவி. செழியன், சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். மாங்குடி, வி. முத்துராஜா, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் க. ரவி மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment