Advertisment

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு (வயது 76) கடந்த மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் அவரது உடல்நிலையைச் சீராக்க மருத்துவர்கள் முயற்சித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார்.

Advertisment

இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த மாதம் 13ஆம் தேதி (13.11.2024) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14.12.2024) காலமானார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழக காங்கிரஸ் தலைமையகமான சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நாளை (15.12.2024) ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல் காங்கிரஸ் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் நாளை மாலை சென்னையில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று தகனம் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆறுதல்களைத் தெரிவித்தார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

- படங்கள் : எஸ்.பி. சுந்தர்

Chennai congress mk stalin evks ilangovan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe