The cm with the People program was launched on December 18

தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில்,மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 18 ஆம் தேதி (18-12-2023) கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கவுள்ளார்.

மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டத்தில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் போன்ற அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெறுவதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புறமற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில்அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக வரும் 18-12-2023 ஆம் தேதி முதல் 06-01-2024 வரை அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகரப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளிலும் 1745 முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்கள் புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாகஏனைய மாவட்டங்களில் நடத்தப்படும்.

Advertisment

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முடிவுற்றவுடன், 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து 31-1-2024 வரை மக்களுடன் முதல்வர் திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் நடத்தப்படும் முகாம்கள் முடிவுற்ற பின்னர், அடுத்த கட்டமாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்த ஆவணசெய்யப்படும்.

இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒரே குடையின்கீழ் மக்களின் கோரிக்கைகளைப் பெற்று பதிவு செய்வார்கள். முகாம்களில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும், சம்பந்தப்பட்ட துறைகளால் 30 தினங்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும் எனத்தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.