இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562லிருந்து 606 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மக்களிடம் உரையாற்றினார். அப்போது, அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன் என்று உருக்கமாக தெரிவித்தார்.
பின்னர் மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு என்று கூறிய அவர், கரோனாவை விரட்டியடிக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து கரோனா வைரஸூன் தீவிரத்தை உணர்ந்து அவசியமில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்த்து, 'விழித்திரு, விலகியிரு, வீட்டில் இரு' என்பதை பின்பற்றி, சாதி, மத, கட்சி பாகுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து கரோனாவை வெல்வோம் என்று என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.