Skip to main content

"கூட்டணியில் இருந்து யாரும் விலகவில்லை" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

cm palanisamy pressmeet at karur

 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர், பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளால் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டதால் பருவ மழையின் போது நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளைத் தூர்வாரி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருப்பதால் கூடுதலாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். விவசாயத் திட்டங்களுக்காக தமிழக அரசு உடனுக்குடன் நிதியை ஒதுக்கி வருகிறது. மேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்க நஞ்சைபுகளூரில் கதவணை கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி இணைப்புக் கடன் தாராளமாகக் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது.

 

காவிரியில் ரூபாய் 406 கோடியில் கதவணை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. கட்டளை கதவணையை ரூபாய் 150 கோடியில் புனரமைக்கும் பணி அரசின் பரிசீலனையில் உள்ளது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து வேளாண் சட்டம் குறித்து சிலர் விஷமத்தனமான பரப்புரை செய்கின்றனர். வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் மத்தியில் விளக்கிக் கூறி வருகிறேன், அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்; இதில் எந்த மாற்றமும் இல்லை. விவசாயிகளைப் பாதிக்கும் எந்த திட்டங்கள் என்றாலும் அதை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது. 

 

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லி நான் விவசாயியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு விவசாயி என்று மு.க.ஸ்டாலின் சான்றிதழ் தர அவசியம் இல்லை. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே நீடிக்கின்றன; யாரும் விலகவில்லை. நீட் தேர்வை தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் கொண்டு வந்தனர். நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்தபோது, அதில் அங்கம் வகித்த தி.மு.க ஏன் மவுனமாக இருந்தது? நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக 7.5% ஒதுக்கீடு கொண்டுவந்தோம். அடுத்தாண்டு புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம் 1,650 இடங்கள் கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.


 

 

 

சார்ந்த செய்திகள்