சென்னை தலைமைச்செயலகத்தில் வங்கி நிர்வாகிகளுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், துரைக்கண்ணு, பெஞ்சமின், தலைமைச் செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர், பல்வேறு துறையைச் சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தின் போது பேசிய முதல்வர் பழனிசாமி, "சிறு, குறு,நடுத்தரதொழில்நிறுவனங்களுக்கு வங்கிகள் கூடுதல் கடன் அளிக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடன்தான்; தமிழகத்தில் 5 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு தமிழகத்துக்குத் தேவை. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பும் அவசியம். விவசாயிகளுக்கு வங்கிகள் உடனுக்குடன் கடனுதவி வழங்க வேண்டும். சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டையை விவசாயிகளுக்கு வங்கிகள் வழங்க வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். ஊரக தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.