ddd

தமிழக முதல்வர் உள்பட மத்திய மாநில அரசாங்க பிரதிநிதிகள், எந்த ஊருக்குப் போனாலும், சொகுசு கார்களில் செல்லும் போதும்கூட, குலுங்காமல் செல்ல வேண்டும் என்பதற்காக பல வருடங்களாகப் பள்ளமும் படுகுழியுமாக உள்ள சாலைகளை இரவு பகலாக வேலை பார்த்து பளபளக்கும் சாலைகளாக்குகிறார்கள்.

Advertisment

ஆனால், பல கிராமங்களில் இறந்தவர் உடலை, மயானத்திற்குக் கொண்டு செல்ல பாதை இல்லாமல், பயிர்கள் வளர்ந்துள்ள வயலுக்குள் இறங்கி தூக்கிச் செல்லும் அவல நிலை இப்போது வரை உள்ளது வேதனை அளிக்கிறது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நாகுடி அருகில் உள்ளது கீழ்குடி கிராமம். சுமார் 200 குடும்பங்கள் வரை வசிக்கிறார்கள். இந்தகிராமத்தில் யார் இறந்தாலும் அவர்களை மயானத்திற்குதூக்கிச் சென்று இறுதிச் சடங்குகள் செய்யபடாதபாடுபடுகிறார்கள் உறவினர்கள்.

அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சிவகுமார் - வெள்ளையம்மாள் தம்பதிகளின் ஒரே மகன் திருக்குமாரன் (வயது 17). அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவந்தார். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குப் போனபோது பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சி. கனையத்தில் பிரச்சனை என்று சொன்னார்கள். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்ல, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நேற்று 8 ஆவது நாளில் 'நீங்க ஊருக்குப் போகலாம்' என்று மருத்துவமனை நிர்வாகம் வெளியே அனுப்பியது.

Advertisment

Ad

துணைக்கு இருந்த தாய் வெள்ளையம்மாளிடம், 'காரில் ஊருக்கு போக ரூ3 ஆயிரம் வேணும், எதுக்கும்மா இவ்வளவு செலவு செய்யனும்,பஸ்ல போவோம்' என்று திருக்குமரன் நேற்று மாலை ஊருக்கு வந்து சேர்ந்தார்.

உறவினர்கள், நண்பர்கள் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். இரவு 8 மணிக்கு மாத்திரை சாப்பிட்டுப் படுக்கப்போன திருக்குமரன் 10 மணிக்கு ஃபிட்ஸ் வந்து துடிக்க மீண்டும் நாகுடி, அறந்தாங்கி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். ஆனால் பயனில்லை. சிறுவனின் உயிர் போய்விட்டது. உறவினர்கள் கூடி அறுவை சிகிச்சையில் கோளாறு இருக்கிறது என்று சொன்னார்கள்.

dddd

இன்று காலை அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்குக் கொண்டு செல்ல தூக்கிச் சென்றார்கள். சிறிது தூரத்தில் பாதை முடிந்து பயிர்கள் போர்த்திய வயல்கள் தான் தெரிந்தது. அந்த வயல்களில் இறங்கி பயிர்களை மிதித்துக் கொண்டே திருக்குமரன் சடலத்தை தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர்.

மயானத்தற்குச் சாலை இல்லையா? என்ற கேள்விக்கு, "கிட்டதட்ட 40 வருடத்துக்கு மேல இப்படித்தான் பாதை இல்லாமல் வயல்களில் பயிர்களை மிதிச்சுகிட்டு சடலங்களை சுமக்கிறோம். அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. பாதை இல்லைன்னு சடலத்தை வீட்டிலேயேவா வைத்திருக்க முடியும். வயல்களில் இறங்கி நடக்கிறோம். எங்க ஊருக்கு எப்பதான் மயானச் சாலை போடுவாங்களோ... நாடு முன்னேறிடுச்சுன்னு மேடை பேச்சுக்கு வேணும்னா பேசலாம், சுடுகாட்டுக்குப் போவபாதை இல்லாத எத்தனையோ கிராமங்கள் இருக்கு. அதில் ஒன்னு கீழ்குடி. மாவட்ட ஆட்சியராவது தலையிட்டு மயான சாலை அமைத்துக் கொடுக்கனும்" என்றனர் உறவினர்கள்.

Nakkheeran

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கரோனா குறித்த ஆய்வுக்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற22 -ஆம்தேதி வருகிறார். அவர் செல்லும் வழி விராலிமலை. அதனால் கடந்த சில நாட்களாக வழியெங்கும் பதாகைகள் வைக்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில், நல்லா இருக்கும் சாலைகள் உள்பட பல வருடங்களாகப் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாகக் கிடந்த சாலைகளும் வேகமாக புதிய சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. ஆனால், அதே மாவட்டத்தின் கீழ்கோடியில் உள்ள கீழ்குடியில் பல வருடங்களாக மயானத்திற்குச் சடலத்தைக் கொண்டு செல்ல ஒரு சாலை இல்லை என்பது வேதனையிலும் வேதனை.