CM M.K.Stalin respect for the statue of Muthuramalingath Devar

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை பசும்பொன்னில் இன்று (30.10.2024) நடைபெற உள்ளது. இதில், தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரியகருப்பன்மற்றும் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் உருவச் சிலைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்கிறார். அப்போது முதல்வருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் எனப் பலரும் மரியாதை செலுத்துகின்றனர். அதேபோன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்த பசும்பொன் வருகை தர உள்ளது குறிப்பிடத்தக்கது.