Advertisment

அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன?

CM MK Stalin What did say in all party leaders meeting

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இன்று (16.07.2024) , காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், கர்நாடக அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “ காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினையும் பின்பற்ற மறுத்து, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையின்படி நமக்குக் கிடைக்க வேண்டிய குறைந்த அளவு தண்ணீரைக் கூட கர்நாடக அரசு வழங்க மறுத்து வருகிறது. இதனை முறியடித்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிப் பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இங்குத் தெரிவித்து இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Advertisment

CM MK Stalin What did say in all party leaders meeting

தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கிடைக்க வேண்டிய நீரினைச் சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடித் தான் நீரைப் பெற்றோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை சாதகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையிலும், கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அடிப்படையில், ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளைத் தீர்மானங்களாகப் படிக்கின்றேன். முதலாவதாக காவிரி நடுவர் மன்றம் 05-02-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் 16-02-2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் தர முடியாது என்று மறுத்துள்ள கர்நாடக அரசிற்கு இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

CM MK Stalin What did say in all party leaders meeting

இரண்டாவதாகக் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரை உடனடியாக விடுவித்திடக் கர்நாடக அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்து சட்டமன்றக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது. மூன்றாவதாகக் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற ஆணையின்படி, தமிழ்நாடு பெறவேண்டிய நீரை உடனடியாகப் பெறுவதற்கு, தேவைப்படின், மாண்பமை உச்சநீதிமன்றத்தை நாடி, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு, காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும் என உறுதியளித்து, எனது உரையை நிறைவு செய்கின்றேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், ஆர்.எஸ். பாரதி, அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஒ.எஸ். மணியன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கு. செல்வப்பெருந்தகை, செ. ராஜேஷ்குமார், பாமக சார்பில் ஜி.கே. மணி மற்றும் சதாசிவம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் மற்றும் எஸ்.எஸ். பாலாஜி, பாஜகட்சி சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வி.பி. நாகை மாலி மற்றும் பி. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி. இராமச்சந்திரன் மற்றும் மூ. வீரபாண்டியன், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எம்.எச். ஜவாஹிருல்லா, புதுமடம் அலீம், கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் மற்றும் சூரியமூர்த்தி, புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பூவை எம். ஜெகன்மூர்த்தி, மதிமுக சார்பில் சதன் திருமலைக் குமார் மற்றும் பூமிநாதன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நீர்வளத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், அரசுத் துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

cauvery
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe