கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வரும் 14ஆம் தேதி இரவு வருகை தர உள்ளார். அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி எல். இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கை திறந்து வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் நூற்றாண்டு அரங்கை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த எல்.இளையபெருமாள் இவர் பட்டியலின மக்களுக்காகவும் தீண்டாமை ஒழிப்புக்காக போராடியவர். இவர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவரின் நினைவை போற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் ரூ. 6 கோடியே 29 லட்சம் செலவில் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய நூற்றாண்டு நினைவு கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா 15ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. அப்போது ல்.இளையபெருமாளின் முழு உருவ வெண்கல சிலையுடன் கூடிய நூற்றாண்டு நினைவு கட்டிடம் முதல்வர் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து நடைபெறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதனையொட்டி இன்று (02.07.2025 - புதன்கிழமை) தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் சிதம்பரம் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இளையபெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கத்தை ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அவர் தங்கும் இடம் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களை நோக்கி நடக்கிறார். அவர் நடக்க நடக்க திட்டங்கள் மக்களுக்கு நிறைவேற்றப்பட்டு வருகிறது. பாமகவில் குடும்ப சண்டையை மறைப்பதற்காக திமுகவை குறை கூறி வருகிறார்கள். மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்” என்றார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். இதேபோல் நூற்றாண்டு அரங்கை விழுப்புரம், தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்டவர்கள் அரங்கத்தின் இறுதி கட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.