“போர் என்பதே கொடூரமானது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

cm mk stalin tweet about Israel Palestine issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 12 நாட்களாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்த சூழலில் பாலஸ்தீனத்தின் காசா நகரில் அமைந்துள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த தாக்குதலை காசா சுகாதாரத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அதே சமயம் இந்த தாக்குதலுக்கு ஹமாஸ் அமைப்பு மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் (ட்விட்டர்) வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “போர் என்பதே கொடூரமானது. அது எந்த நோக்கத்துக்காக யாரால் நடத்தப்பட்டாலும், அதில் முதல் பலியாவது அப்பாவி பொதுமக்கள்தான். கடந்த பத்து நாட்களாக காசா பகுதியில் நிகழும் போர், உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. உயிருக்குப் பயந்து இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், மொத்தமாக அழிக்கப்பட்ட குடியிருப்புகளும், கடும் காயமடைந்த குழந்தைகளின் அழுகுரலும், குடிநீர் - உணவின்றித் தவிப்போரின் வேதனையும் இதயமுள்ளோர் அனைவரையும் கலங்க வைத்துள்ளன.

cm mk stalin tweet about Israel Palestine issue

போரின்போது மருத்துவமனைகள் தாக்கப்படுதல் கூடாது என்பதையும் மீறி மருத்துவமனை தாக்கப்பட்டு நூற்றுக்கணக்கானவர் மரணம் அடைந்துள்ளார்கள். மனிதம் மரத்துப் போய்விட்டதா. உலக சமுதாயம் இனியும் இதைக் கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐக்கிய நாடுகள் அவையும், அனைத்துலக நாடுகளும் ஓரணியாக நின்று இக்கொடும் போரை நிறுத்த வேண்டும். அப்பாவி பொதுமக்களின் உயிர்களைக் காக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

israel palestine
இதையும் படியுங்கள்
Subscribe