Advertisment

பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சந்திப்பு!

CM MK Stalin today meeting along with PM Modi

Advertisment

பிரதமர் மோடியைச் சந்திக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.09.2024) மாலை 5 மணியளவில் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அதன்படி டெல்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாடு இல்லத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.09.2024) காலை 11 மணி அளவில் சந்தித்துப் பேச உள்ளார்.

அப்போது சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துகிறார். அதோடு ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழகத்திற்கான வரி நிலுவைகள், கடந்த ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதி வழங்கவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம் இந்த பயணத்தின் போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு எட்டு மணிக்குச் சென்னை திரும்புகிறார்.

Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe