
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மூத்த தலைவரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதற்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிக்க வேண்டும் என கமலை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டிருந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இந்நிலையில், இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.