Skip to main content

“எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 28/05/2025 | Edited on 28/05/2025

 

CM MK Stalin says We have crushed the opposition parties’ ideas 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (23.12.2024) அப்பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மறுநாளே கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி இந்த வழக்கின் அனைத்து சாட்சி விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்தன. அதன் பின்னர் இரு தரப்பினரும் இறுதி வாதங்களை முன் வைத்தனர். இவ்வாறு இரு தரப்பின் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் மே 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் எனச் சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதனையொட்டி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஞானசேகரன் அங்கிருந்து மகளிர் நீதிமன்றத்திற்கு இன்று (28.05.2025) அழைத்து வரப்பட்டு நீதிபதி ராஜலட்சுமி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி ராஜலட்சுமி இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், “இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் மீதான 11 பிரிவுகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என தீர்ப்பை வாசித்தார். மேலும்,“தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவு உள்ளதா?” எனவும் நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். அதே சமயம் ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவில், “சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றத்துக்கும் நன்றி. காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது, ‘குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்’. குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்” எனத் தெரிவித்துள்ள்ளார். 

சார்ந்த செய்திகள்