தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இன்று (15.07.2025) தொடங்கி வைத்தார். அதன் பின்னர் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மக்களிடம் முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டு விவரங்களை கேட்டறிந்து, மனுக்கள் பதிவு செய்யப்படுவதை ஆய்வு செய்தார். அதோடு லால்புரத்தில், எல். இளையபெருமாளின் உருவவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து உரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற முன்னெடுப்பு மூலமாக பொதுமக்களான உங்களிடமிருந்து பெற்ற மனுக்களுக்கு நூறு நாட்களில் தீர்வு காண்பேன்: நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்திருந்தேன். சொன்னது போலவே முதலமைச்சராக பொறுப்பேற்ற உடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்று தனித்துறையை உருவாக்கி அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இதனால், நம்முடைய அரசின் மீது நம்பிக்கை வைத்து, இன்னும் பலர் மனுக்களை வழங்க தொடங்கினார்கள். அதற்காக முதல்வரின் முகவரி என்ற தனி துறையை உருவாக்கினோம். 

அடுத்து மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 5000 முகாம்கள் நடத்தி, பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டோம். இதுவரை, ஆட்சிக்கு வந்து மனுக்களைப் பெற்று அதன் மீது தீர்வு கண்ட விபரங்களை நேற்று கூடுதல் தலைமைச் செயலாளர் அமுதா விரிவாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளுக்கு அவர் எடுத்துச் சொன்னார். இப்போது, அதன் அடுத்த கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை தொடங்கி இருக்கிறோம். மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெற இருக்கிறது. தன்னார்வலர்கள் வீடு வீடாக வந்து உங்களை (பொதுமக்களை) சந்தித்து, முகாம் நடக்கும் நாள், இடம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சொல்லிவிடுவார்கள். 

என்னென்ன ஆவணங்களை நீங்கள் முகாமிற்கு கொண்டுவர வேண்டும் என்ற தகவலையும் சொல்லி, விண்ணப்பங்களை வழங்கி விடுவார்கள். மாதம் 1000 ரூபாய் வழங்குகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் உள்ளிட்ட 46 சேவைகள் தொடர்பாக தீர்வுகாண விண்ணப்பங்களை வழங்கப் போகிறோம். தகுதி இருந்தும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள் உங்கள் பகுதியில் முகாம் நடைபெறுகின்ற அன்றைக்கு விண்ணப்பங்களை கொடுத்தால் போதும். நிச்சயமாக சொல்கிறேன் உங்களுக்கு நிச்சயமாக உரிமைத் தொகை வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் நோக்கமே மக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று, அரசின் சேவைகளையும், திட்டங்களையும் வழங்குவதுதான். 

Advertisment

இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் அந்த வரிசையில் இந்த முன்னெடுப்பில், அரசு அலுவலர்களும், அதிகாரிகளும் உங்களைத் தேடி வரப் போகிறார்கள். இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில், மருத்துவ முகாம்களும் சேர்த்து நடைபெறும். இப்படி மக்களான உங்களின் தேவையை அறிந்து தீர்த்து வைப்பதுதான் நம்முடைய திராவிட மாடல் அரசு” எனப் பேசினார்.