தகைசால் தமிழர் விருது : “திராவிட மாடல் அரசு பெருமிதம் கொள்கிறது” - முதல்வர் நெகிழ்ச்சி!

mks-kathar-mohiden

இந்த ஆண்டுக்கான் தகைசால் தமிழர் விருதிற்கு கே.எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும்  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கடந்த 2021இல் ஆணையிட்டிருந்தார்.இந்த விருதினை கடந்த 4 ஆண்டுகளில் சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, கி. வீரமணி மற்றும் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் குழுவின் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (04.07.2025) நடைபெற்றது.

இதில் மூத்த அரசியல் தலைவரும், கலைஞரின் அவர்களின் அன்புக்குரியவருமான பெரியவர், மணிச்சுடர் இதழின் ஆசிரியரும், இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன், சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்துவரும் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீனை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.மேலும், கே.எம்.காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். தமிழ்நாட்டில் இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். மனித நேய மாண்பாளர். பழகுவதற்கு இனிய பண்பாளர். அறிவார்ந்த சொற்பொழிவாளர். மனிதநேயத்திற்கும் மதநல்லிணக்கத்திற்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். 

கோவையில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டிற்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர். எட்டாண்டுகள் தொடர்ந்து தாருல் குர்ஆன் இதழில் 'தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?" எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியவர். வாழும் நெறி, குர்ஆனின் குரல், இசுலாமிய இறைக்கோட்பாடு உட்பட ஆறு நூல்களை எழுதியவர். மேலும் கே.எம்.காதர் மொகிதீன், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். கண்ணிய தென்றல் காயிதே மில்லத் காலம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர். பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி அவர்களின் வாழ்வினை உயரத்துக்கு உயர்த்திய ஆசானும் ஆவார். தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.எம். காதர் மொகிதீனுக்கு. பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில்முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் காலந்தொட்டே சமூக நல்லிணக்கத்துக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வரும் சிந்தனையாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர், பல நூறு பட்டதாரிகளை உருவாக்கிய பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயாவுக்கு இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை அறிவிப்பதில் திராவிட மாடல் அரசு பெருமிதம் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Award independence day. indian union muslim league K.M. Kader Mohideen mk stalin TamilNadu government
இதையும் படியுங்கள்
Subscribe