ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (24.07.2025) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாசித்தார். அதில், “பள்ளிகள் என்ற சமுதாயத்தின் அறிவு நாற்றங்கால்களைப் பாதுகாத்து, பேணி வளர்த்து எதிர்காலத்திற்கான சிந்தனை வளமிக்க தலைமுறையை உருவாக்கும் ஆகச்சிறந்த பணிதான் ஆசிரியர் பணி.
தங்களது ஆசிரியர்களை முன்மாதிரி ஆளுமைகளாகக் கொண்டுதான் மாணவர்கள் எதிர்காலத்திற்கான இலக்குகளையும். கனவுகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். அத்தகைய மகத்தான ஆசிரியர் சமூகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்குமான உறவு என்பது அரசியலையும் தாண்டிய நெருக்கத்தையும், பிணைப்பையும் கொண்டதாகும். கலைஞர் ஆசிரியர்கள் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பையும், பரிவையும், ஆசிரியர் சமூகம் என்றென்றும் மறக்காது. அதே வழியில் திராவிட மாடல் அரசும் ஆசிரியர்களின் நலம் பேணி, அதன் மூலம் மாணவச் செல்வங்களின் அறிவு வளம் பேணும் பணியை ஆற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் பள்ளிகளில் காலியாக உள்ள 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. பிற்போக்குத்தனமான, அறிவியல் அணுகுமுறைகளுக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை ஒன்றிய பாஜக அரசு வழங்க மறுத்து வருவதை அறிவீர்கள். அத்தகைய நெருக்கடிக்கு இடையிலும், பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதற்கான பல புதுமையான திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், வாசிப்பு இயக்கம். மாவட்டம்தோறும் மாதிரிப் பள்ளிகள், 28 மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கற்றல் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கான தகைசால் பள்ளிகள், மாணவச் செல்வங்களின் கலை ஆற்றலை இனம் கண்டறிந்து ஊக்குவிப்பதற்காகப் பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு விருதுகளை வழங்குதல், அரசு நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 519.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் 455.32 கோடி ரூபாய் செலவில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் எனப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவற்றில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்பு பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் கண்டு, அவர்களுக்கென நலம் நாடி செயலி வடிவமைக்கப்பட்டுத் தக்க சிறப்புக் கல்வி வழங்குவது உள்ளிட்ட திட்டங்களின் மூலம் அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய கற்பித்தல் முறையாகப் பள்ளிக் கல்வியை மேம்படுத்துவது மிகச் சிறப்பான ஒரு திட்டமாகும்” னத் தெரிவிக்கப்பட்டுள்ளது.