Advertisment

“குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்” - முதல்வர்!

CM mk stalin says Lets work together to make the state free of child labor

குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின செய்தியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், “ உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகின்றது. நம் சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றம், இன்றைய குழந்தைகளை சார்ந்துள்ளது. அவர்கள் தான் நாளைய நாட்டை வழிநடத்தும் செல்வங்கள். துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டிய இனிய பருவத்தில் அவர்களை குழந்தை தொழிலாளராக பயன்படுத்துவது சட்டத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் முற்றிலும் புறம்பானது. குழந்தைகளின் அறிவை வளர்த்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

Advertisment

ஆனால், ஒரு சில குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல், தொழிலாளர்களாக மாறும் போது, அவர்கள் கல்வி, விளையாட்டு, சுதந்திரம் மற்றும் அவற்றால் கிடைக்கக்கூடிய நல்ல எதிர்காலம் ஆகியவற்றை இழக்கிறார்கள். ஒரு எதிர்கால சாதனையாளரை இழப்பது என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. எனவே, அத்தகைய சூழலை தடுப்பது மிக அவசியம். கல்வி கற்கும் உரிமையை அனைத்து குழந்தைகளும் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்கவும், அனைத்து குழந்தைகளின் கல்வி கற்றலையும் உறுதி செய்யும் பொருட்டு குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்காக அரசு மாநில செயல் திட்டத்தையும். நிலையான இயக்க நடைமுறைகளையும் உருவாக்கியுள்ளது. குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம். 1986 தமிழ்நாட்டில் மிக கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும், அரசு ஊழியர்கள், குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்று, குழந்தைத் தொழிலாளர் இல்லாத சமுதாயத்தை உருவாக்க சீரிய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் தரமான கல்வி கற்கவும், பெற்றோர்களின் சுமைகளை குறைக்கவும், தமிழ்நாடு அரசு கட்டணமில்லா கல்வி, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலைச் சிற்றுண்டி மற்றும் சத்தான மதிய உணவு, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள் போன்ற பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பினை நல்கி, குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற விழிப்புணர்வுடன், தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று உறுதியேற்போம்.குழந்தைகளே நம் நாட்டின் செல்வம்! கல்வியே குழந்தைகளுக்கு நிரந்தர செல்வம்! குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்! குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றிடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

tn govt child labour mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe