/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tvl-bus-art.jpg)
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து, லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலையில் ஏற்பட்ட இந்த கோர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல்களை தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பழமத்தூர் கிராமத்தின் எல்லைக்குட்பட்ட புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் இன்று (16.05.2024) அதிகாலை திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் சிக்கியது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-sad-art_8.jpg)
இதில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி தனலட்சுமி (வயது 53) செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், அகிலி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜேஷ் (வயது 30), சென்னை பட்சாலையைச் சேர்ந்த அவேஷ் மோகன் மகன் பிரவின் (வயது 24) மற்றும் அடையாளம் தெரியாத பெண் உட்பட நான்கு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
மேலும் இவ்விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்து, காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us