சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025)  சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், குற்றங்கள் குறித்தும் அவைகள் மீது எடுக்கப்பட்ட உடனடியான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். அதோடு நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சட்ட ஒழுங்கை பாதுகாத்து காவல்துறையினர் நீதியை நிலை நாட்ட வேண்டும் .மேலும் புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்” என காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் . தீரஜ் குமார், காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், காவல் துறை இயக்குநர் (நிருவாகம்) ஜி. வெங்கட்ராமன், காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம், சென்னை மாநகர காவல் ஆணையர் ஆ. அருண், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. ‘போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும்’ என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.