/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm-mks-letter-art-cabinet_10.jpg)
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.02.2025) கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட மத்திய அரசின் பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வலியுறுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில், “மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரின் 31.01.2025 ஆம் நாளிட்ட கடிதத்தில், திறன்மிகு குழந்தைகள் (Mission Saksham Anganwadi மற்றும் POSHAN 2.0), (Mission Shakthi) மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் (Mission Vatsalya) போன்ற மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு, 29.1.2025ஆம் நாள் நிலவரப்படி ரூ.716.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது எனத் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான நேர்வுகளில், மத்திய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே நிதியாண்டின் முடிவிற்குள் மத்திய அரசு ஒதுக்கும் தொகையைக் குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்னும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 304 கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்குத் தொகையான 184 கோடி ரூபாய் இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரியக் காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளது.
இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை (Single Nodal Agency) கணக்குகளில் உள்ள 576.22 கோடி ரூபாயில், இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும். மீதமுள்ள தொகை மத்திய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)