கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்து, சமூக நீதி காவலர் எல். இளையபெருமாளுக்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நினைவு அரங்கத்தை திறந்து வைத்த பின்னர் பரமேஸ்வரநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர்  பேசுகையில், “வரலாற்று சிறப்புமிக்க நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.  ஐயா இளையபெருமாளின் நினைவு அரங்கத்தை திறந்து வைத்திருக்கிறேன்.அது மட்டுமல்ல பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் பொதுமக்களின் குறைகளை விரைவில் தீர்த்து வைக்கும் வகையில் மாபெரும் முன்னெடுப்பாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்து விட்டு, நினைவு அரங்கத்தை திறந்து வைத்துள்ளேன்.

கடந்த 2021க்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என அனைத்து தொகுதிகளிலும் பெற்ற மனுக்களுக்கு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு உங்கள் தொகுதியில் முதல்வர் என தனி துறையை உருவாக்கி அந்த மனுக்களுக்கு 100 நாளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து இன்னும் பல ஆயிரகணக்கான மனுக்களை மக்கள் வழங்கினார்கள். அதற்காக முதல்வரின் முகவரி என தனி துறையை உருவாக்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன் பிறகு மக்களுடன் முதல்வர் எனத் திட்டத்தை தொடங்கி தமிழக முழுவதும் 5000 இடங்களில் முகாம்கள் நடத்தி பல லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதேபோல் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  இதில் தமிழக முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெறும். இதில் தன்னார்வர்கள் வீடு ,வீடாக வந்து மக்களின் குறைகளை கேட்டு 46 சேவைகளுக்கான விண்ணப்பங்களை வழங்க உள்ளனர். அதே போல்உங்களுடன் ஸ்டாலின்  முகாம் நடைபெறும் போது மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்க விண்ணப்பம் வழங்கப்படும். அதில் தகுதி உள்ள மகளிருக்கு கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என்ற முனைப்போடு தற்போது மக்களை தேடி சேவைகளை செய்ய அதிகாரிகள், அலுவலர்கள் உங்களைத் தேடி வருவார்கள் இதுபோல மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது தான் திராவிட மாடல் அரசு இது நிகழ்காலத்தில் நெஞ்ச நிமித்தி சொல்லும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்காக, அரசியலுக்கு அடையாளமாக திகழ்ந்த பெரியவர் ஐயா எல. இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைத்து திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்பதைவிட பெருமைப்படுகிறேன். 

சமூக சீர்திருத்தவாதிகள்  அயோத்திதாசர் பண்டிதர், தாத்தா ரெட்டமலை சீனிவாசன், எம் சி ராஜா, சிவராஜ், சாமி சகஜனந்தா அந்த வரிசையில் கம்பீரமாக போராடியவர் தான் அருமை பெரியவர் இளையபெருமாள். இந்த மேடையில் மார்க்சிய இயக்கத்தின் தலைவர்கள், காந்திய வழி தலைவர்கள், அம்பேத்கர் வழிய தலைவர்கள் ஒற்றுமையாக உள்ளோம். இதுதான் ஓரணியில் தமிழ்நாடு. உறுதியோடு சொல்கிறேன். இது போல் தமிழ்நாடு ஓரணியில் நிற்கும் போது எந்த டெல்லி காவி அணியின்  கனவு திட்டமும் தமிழகத்தில் பலிக்காது. ஐயா இளையபெருமாள் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் தலைவராக இருந்தபோது அவர் 3 ஆண்டு காலம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்து பட்டியலின மக்களின் சாதிய கொடுமையையும், தீண்டாமையும் ஆய்வு செய்து அறிக்கையாக தாக்கல் செய்தார்.

Advertisment

அவர் அளித்த அறிக்கை சாதி அமைப்பை மறைக்காமல் துல்லியமாக இருந்தது. அந்த அறிக்கை வெளிய வரக்கூடாது என அவரை தாக்கினார்கள். அதிலிருந்து தப்பித்து வந்து அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தார். இதுபோன்ற தாக்குதல் நடைபெறும் என அவர் ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் அப்போது திமுக பாராளுமன்ற உறுப்பினர்  இரா. செழியனிடம் அறிக்கையின் பிரதியை கொடுத்து வைத்திருந்ததால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிந்தது.

இளையபெருமாள் அறிக்கையின் அடிப்படையில் தான் தமிழக அரசு 29 அனைத்து சாதியை சார்ந்த அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு கோவில்களில் பணியாற்றி வருகிறார்கள். இதற்கு இளையபெருமாள் அறிக்கை முக்கியமான காரணம். 1998ஆஅம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தமிழக அரசின் விருதை முதன் முதலாக ஐயா இளையபெருமாளுக்கு தான் கலைஞர் வழங்கினார். நூற்றாண்டு நினைவகம் அமைக்கப்பட்டது இளையபெருமாளுக்கு புகழ் சேர்ப்பதற்கு என நினைத்து விடாதீர்கள், இது திராவிடர் மாடல் அரசு அவருக்கு செலுத்துகிற நன்றி ஆகும் என பேசினார்.  இந்நிகழ்ச்சியில் குறிஞ்சிபாடி, பண்ருட்டி பகுதியில் உள்ள 12 ஆயிரம் பெண்கள் பயன்பெறும் வகையில் 150 ஏக்கரில் ரூ 75 கோடியில் தோல் இல்லா காலணி தொழிற்சாலை அமைக்கப்படும், இதில் சுற்றுசூழல் பாதிப்பு இருக்காது என முதல்வர் அறிவித்தார்.