தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகத் திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக இன்று (09.07.2025) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூருக்கு வருகை தந்தார். அதன்படி இன்று மதியம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் கோட்டத்தைப் பார்வையிட்டார். அப்போது  முன்னாள் முதல்வர் கலைஞரின் கடந்து வந்த பாதை, வாழ்க்கை வரலாறு, திரைத்துறை சார்ந்த புகைப்படங்கள், கலைஞர் முக்கிய தலைவர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் கலைஞர் எழுதிய நூல்கள் உள்ளிட்டவற்றைக் கண்டு ரசித்தார்.

இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் கோட்டகத்தில் இருந்து, கலைஞரின் தாயாரும்,  முதல்வரின் பாட்டியுமான அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். இந்த பயணத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். அதாவது பவுத்திரம் மாணிக்கம் பகுதியில் இருந்து துர்காலா சாலை, தியாகராஜர் கோயில் அமைந்துள்ள மேலவீதி, தெற்கு வீதி மற்றும் பழைய பேருந்து நிலையம் வழியாக ரோட்ஷோ நடைபெற்றது. சுமார் 5 கி.மீ. தொலைவிற்கு ரோட் ஷோவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ரோடு ஷோவின் போது சாலையின் இருபுறமும் இருந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் வழிநெடுகிலும் அவருக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர். சால்வை அணிவித்தும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி வணக்கம் தெரிவித்தார். மேலும் குழந்தைகள், பெரியவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்பி எடுத்துக் கொண்டார். அதே போன்று பொதுமக்களும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இவ்வாறு 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று ரோடு ஷோ நடத்தினார்.