/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nilgiris-cm-mks-art.jpg)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவிகளைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி சென்றடைந்தார். இந்நிலையில் அங்குக் கள ஆய்வுக்காகச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குப் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது தன்னை வரவேற்பதற்காகக் காத்திருந்த பொதுமக்களைக் கண்டதும் காரில் இருந்து இறங்கிச் சென்று நேரடியாகச் சந்தித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அதோடு சிறிது தூரம் நடந்து சென்று மக்களின் வரவேற்பைப் பெற்றுக்கொண்டார். அங்கிருந்தவர்களிடம் கை குலுக்கி வணக்கம் தெரிவித்தார். அந்த வகையில் முதற்கட்டமாக குஞ்சப்பணை என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பழங்குடியின மக்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ஆ.ராசா, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து உதகை அரசு கலைக்கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நாளை (06.04.2025) நடைபெறும் அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். அப்போது அவர் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 1703 முடிவுற்ற திட்டப்பணிகளை ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்க உள்ளார். அதோடு ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், ரூ.102.17 கோடி மதிப்பீட்டில் 15 ஆயிரத்து 634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இவ்விழாவில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொள்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)