
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு (Listing Ceremony of "GCC Municipal Bonds" on National Stock Exchange) சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (26.05.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணி ஒழித்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு., பி.கே. சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன், துணை மேயர் மு. மகேஷ்குமார், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நகர்ப்புர உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தேவைப்படும் நிதிக்காக பல்வேறு நவீன நிதி திரட்டும் முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் மூலம் உட்கட்டமைப்பு திட்டத்திற்கு நிதி திரட்டியது ஒரு முக்கிய நிகழ்வாகும். பெருநகர சென்னை மாநகராட்சி 10 ஆண்டு காலத்திற்கு, ஆண்டுக்கு 7.97% என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் 200 கோடி ரூபாய் நகர்ப்புர நிதிப் பத்திரங்களை வெற்றிகரமாகத் திரட்டியது. 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட நகர்ப்புர நிதிப் பத்திர வெளியீடுகளிலும் இதுவே மிகக் குறைந்த வட்டி விகிதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெளியீட்டுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி 100 கோடி ரூபாய் அடிப்படை வெளியீட்டுத் தொகையை விட 4.21 மடங்கு அதிகமாக, அதாவது 421 கோடி ரூபாய் மதிப்பிலான ஏலங்கள் தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏலம் மூலம் பெறப்பட்டன. இது பெருநகர சென்னை மாநகராட்சியின் வலுவான நிதி மேலாண்மை மற்றும் திட்டத்தின் கட்டமைப்பிற்கு முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இந்த நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் மூலம் திரட்டப்பட்ட நிதி, கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைப்பிற்கு (ISWD) பயன்படுத்தப்படும். இது சென்னையின் வெள்ளத் தடுப்பு மற்றும் நிலையான நகர்ப்புர வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான உட்கட்டமைப்பு திட்டமாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பொறுப்பான, திறன்மிக்க நிதி மேலாண்மையால் தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சீர்செய்து வரும் திராவிட மாடல் அரசின் புதுமுயற்சியாக, சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகர்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுகின்றன. இதனால் கடனுக்கான வட்டி செலுத்துவது குறைந்து, மழைநீர் வடிகால் உள்ளிட்ட இன்றியமையாத உட்கட்டமைப்புப் பணிகளுக்கான நிதி திரட்டப்படும். மாநகராட்சியின் நிதிநிலை மேம்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.