Skip to main content

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டிய முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

CM MK Stalin praised Minister Udayanidhi Stalin

 

சீனாவின் ஹாங்சூவில் கடந்த 23.09.2023 முதல் 8.10.2023 வரை நடைபெற்ற 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 20 வீரர், வீராங்கனைகள் 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றனர். இதனையடுத்து சென்னையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக 9 கோடியே 40 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.10.2023) வழங்கி வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து பதக்கங்களைப் பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதற்காக நாம் இங்கே கூடி இருக்கிறோம். இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு பதக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளார்கள் என்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

 

இந்தியா மொத்தமாக வென்ற 107 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இந்திய அளவில் பார்த்தால் நமது மாநிலம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது. பல்வேறு பதக்கங்களை வென்ற 20 விளையாட்டு வீரர்களுக்கு இன்று 9 கோடியே 40 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகை பரிசுகள் வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அகில இந்திய அளவிலே, உலகளவிலான போட்டிகளில் தொடர்ந்து உங்களது பங்களிப்பை செலுத்துமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியான பதக்கங்கள் பெறுவதும், தொடர் வெற்றிகளைப் பெறுவதும்தான் உங்களுக்கும் பெருமை. நமது தமிழ்நாட்டுக்கும் பெருமை. ஏன் இந்தியாவிற்கே பெருமை. இந்தப் பாராட்டு உங்களுக்கும் உங்களது வெற்றிக்கும் மட்டுமல்ல, நீங்கள் இன்னும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று ஊக்கமளிக்கவும், உங்களைப் போல இன்னும் பல வீரர்கள் உருவாக அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் தான் உங்களைப் பார்த்து இன்னும் ஏராளமான வீரர்களும் வீராங்கனைகளும் உருவாவார்கள் என நம்புகிறேன்.

 

CM MK Stalin praised Minister Udayanidhi Stalin

 

எந்தவொரு அரசாக இருந்தாலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும். ஆனால் நம்முடைய திராவிட மாடல் அரசானது அனைத்துத் துறைகளிலும் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலமாக, அனைத்துத் துறைகளையும் ஒருசேர வளர்த்து வந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகின்றன. அதில் விளையாட்டுத் துறையும் ஒன்று. இந்தத் துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது. விளையாட்டுத் துறையின் மூலமாக, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் எழுச்சி பெற்று வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார். அந்தத் துறையின் கேப்டனாக இருந்து, அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கும் அவரது துறையைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

 

இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர்கள் அசோக் சிகாமணி, இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.