Advertisment

நாமக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு!

cm MK Stalin Praise for Namakkal District Police

Advertisment

கேரள மாநிலம் திருச்சூரில் கடந்த மாதம் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளையடித்தனர். ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு கொள்ளை கும்பல் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச் செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை குமாரபாளையம் அருகே போலீசார் நிறுத்தியும் நிற்காமல் சென்றது. இதையடுத்து விரட்டி சென்ற போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கி கொள்ளை கும்பலை பிடித்தனர்.

இந்த சம்பவத்தைப் பாராட்டி கேரள தலைமை காவல் துறை இயக்குநர் ஷேக் தர்வேஷ் சாஹிப், தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, சம்பவம் நடைபெற்று 6 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களைப் பிடித்தது பாராட்டத்தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவத்தின்போது, ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் இமையவர்மன், முருகேசன், ராஜா, காவல் ஆய்வாளர்கள் தவமணி, ரங்கசாமி, காவல் துணை ஆய்வாளர்கள் என மொத்தம் 23 காவல் துறையினருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளையும். பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

அதோடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காவல் துறையினருடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொம்மைகுட்டைமேடு என்ற இடத்தில் இன்று (22.10.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

kumarapalayam namakkal police
இதையும் படியுங்கள்
Subscribe