CM MK Stalin obituary for Tenkasi Dt vaadiyur Auto Incident 

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைக்குளம் பகுதிக்கு விவசாயப் பணிக்காக லோடு ஆட்டோவில் பலர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் குறுக்கே நாய் ஓடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆட்டோ ஓட்டுநர் வண்டியைத் திருப்ப முயன்றபோது திடீரென லோடு ஆட்டோ சாலை ஓரத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்த நிலையில் 14 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை வேளையில் விவசாயப் பணிக்காகச் சென்ற லோடு ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

இந்நிலையில் இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தென்காசி மாவட்டம் திருச்சிற்றம்பலம் கிராமத்திலிருந்து சுரண்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட ஆணைகுளம் கிராமத்திற்கு இன்று (28.08.2024) காலை சுமார் 06.00 மணியளவில் விவசாய வயல் வேலைக்காக 17 நபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வாடியூர் மேல்புறம் சாலையின் வளைவில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக நான்கு சக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணம் செய்த திருச்சிற்றம்பலம் கிராமம், பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த மாடசாமி மனைவி வள்ளியம்மாள் (வயது 60), தங்கமணி மனைவி பிச்சி (வயது 60) மற்றும் ஆறுமுகம் மனைவி ஜானகி (வயது 52) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும். வேதனையும் அடைந்தேன்.

Advertisment

CM MK Stalin obituary for Tenkasi Dt vaadiyur Auto Incident 

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 14 நபர்களுக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.