CM MK Stalin obituary Covai Selvaraj

முன்னாள் எம்.எல்.ஏ.வும், திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (வயது 66) மகனின் திருமண நிகழ்ச்சி திருப்பதியில் நடைபெற்றது. இதில் அவர் பங்கேற்றுவிட்டு திருப்பதி மலையில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அவரது உயிர் பிரிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான கோவைக்கு நாளை (09.11.2024) காலை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்த போது கோவை செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். அதன்பின்னர் திமுகவில் இணைந்து செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்தார். இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் கோவை செல்வராஜ் மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்சியின் கொள்கைகளை, கருத்துகளை விவாதங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் ஆணித்தரமாக எடுத்து வைத்தவர்.

Advertisment

சமீபத்தில் நான் கோவை சென்றிருந்த போது, அங்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் என்னைச் சந்தித்தார். அப்போது அவர், ‘நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது’ என்று நெஞ்சாரப் பாராட்டினார். மேலும், ‘மகனின் திருமணத்தை வைத்திருக்கிறேன். திருமணம் முடிந்து மணமக்களுடன் வந்து தங்களிடம் சென்னையில் வாழ்த்து பெறுகிறேன்’ என்றார். ஆனால் இன்று மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே, அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி, என்னை ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. கோவை செல்வராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.