CM MK Stalin makes important announcement for Tribal student wins JEE exam

சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவி ராஜேஷ்வரி. இவர் இந்த ஆண்டு (2025) நடைபெற்று ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் (JEE ADVANCED) தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இவர் இந்தியத் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (IIT) உயர்கல்வி பயிலத் தகுதி பெற்றுள்ளார். இவரது தந்தை கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் தந்தையின் கனவை மாணவி ராஜேஷ்வரி நனவாக்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் சல்யூட். அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐ.ஐ.டி.க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காகத் திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அதே போன்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி, 12ஆம் வகுப்பில் 521 மதிப்பெண்களும், ஜே.இ.இ. தேர்வில் இந்திய அளவில் 417வது இடத்தையும் பிடித்து, ஐ.ஐ.டி. மெட்ராஸில் இடம் கிடைத்துள்ள செய்தி கேட்டு மகிழ்வுற்றேன். மாணவி ராஜேஸ்வரிக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகள். தனது தந்தையாரைக் கடந்த 2024இல் புற்றுநோயால் இழந்த நிலையிலும், ராஜேஸ்வரி உழைத்துப் பெற்றுள்ள இந்த வெற்றி மெச்சத்தக்கது. கல்வி ஒன்றே சமூக முன்னேற்றத்தின் வழி. மாணவி ராஜேஸ்வரி உயர்கல்வியிலும் சிறக்க வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.