Advertisment

9 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

CM MK Stalin letter to 9 State CMs

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே போன்று, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு- காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

அக்கடிதத்தில், “பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதலமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Advertisment

எனவே அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என தான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா முதலமைச்சர்களைக் கேட்டுக் கொள்கிறேன். பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல் ஆகும்.

இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம். எனவே, தனது இந்தக் கோரிக்கையை மாநில முதலமைச்சர்களும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

karnataka Puducherry Punjab Jharkhand Delhi ugc letter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe