
2026ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்படவேண்டிய முடிவுகள் குறித்தும், ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள 22.3.2025 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தெற்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா; கிழக்கில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா; வடக்கில் பஞ்சாப் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவில் (JAC) சேர தங்களின் முறையான ஒப்புதல். (கூட்டு நடவடிக்கைக் குழுவில் பணியாற்றவும், ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் தங்கள் கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமித்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டின் முதல் கட்டமாக, மார்ச் 22, 2025 அன்று சென்னையில் ஒரு தொடக்கக் கூட்டத்தை நடத்த தாம் முன்மொழிகிறேன். நமது கூட்டு முயற்சியை முன்னெடுத்துச் செல்ல இந்தத் தருணத்தில் தங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன்.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் நமது கூட்டு நன்மைக்காகவும், வளர்ச்சிக்கான சரியான ஆதாரங்களைப் பெறுவதற்கும், கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த முக்கியமான கொள்கைகளில் மாநிலத்தின் பங்களிப்பை அளிப்பதற்கும், நமது பொருளாதார முன்னுரிமைகள் தேசிய அளவில் உரிய கவனம் பெறுவதை உறுதி செய்வதற்கும், நாம் தனித்தனி அரசியல் அமைப்புகளாக அல்லாமல் நமது மக்களின் எதிர்காலத்தின் பாதுகாவலர்களாக ஒன்றிணைய வேண்டும். எனவே மார்ச் 22, 2025 அன்று சென்னையில் தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கடிதமானது மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கான முன்னான் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா துணை முதலமைச்சர் சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான், ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஆந்திரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இக்கடிதம் மேற்குறிப்பிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு முக்கியக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.