சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (07.07.2025) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை, இயற்கை வளங்கள் துறை, போக்குவரத்துத் துறை, உயர்கல்வித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் ஆய்வுக்கூட்டம். அதே போன்று பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து சுமார் நான்கு மணி நேரம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிலப் பயன்பாட்டு தகவல் அமைப்பு, நீடித்த நிலையான சுரங்க கொள்கையை உருவாக்கும் பணிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டுத் திறன், சேவை வழங்கல் மற்றும் நிதி நிலையை மேம்படுத்தும் திட்டம், சமூக நீதி விடுதிகளின் செயல்பாடுகள், 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைக் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் வளர்க்கும் திட்டம், அமைப்புசார நலவாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவது, ஆதிதிராவிட, பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் செயல்பாடுகள், புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் கட்டுமானப் பணிகள் போன்ற பல்வேறு துறைகளின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு, விவரங்களை கேட்டறிந்தார்.
அதோடு துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் உரிய காலத்திற்குள் விரைவாக முடித்திட உயர் அலுவலர்களை அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறையின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மங்கத் ராம் சர்மா, சிறப்பு திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் உள்ளிட்ட அரசு துறை செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன். ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன். அறிவித்தால் ஆணையாக வேண்டும்!. அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! அதுதான் திராவிட மாடல் என அனைவர் மனதிலும் பதிய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.